December 11, 2014

கட்டுரைப்போட்டி- மூன்றாவது பரிசு கட்டுரை

தமிழகத்தில் அகத்தியலில் ஆணும் புறத்தியலில் பெண்ணும் - முத்துராஜ் பாலசுப்ரமணியன் 
என்னுரை:
அகத்திணை என்றாலே பசலையும் பெண்களுமாகவே உருவகப்படுத்தப்பட்ட நிலையில், சற்றே வித்தியாசமாக அகத்திணையில் ஆண்களைப் பற்றி அதுவும் ஆண் பரத்தையைப் பற்றிய என் பார்வையும், பழந்தமிழகத்தில் வாழ்ந்த மறக்குடிப் பெண்கள் போர்க் களத்திற்கு ஆடவரைப் போக்குவதில் தயக்கம் காட்டினாரல்லர்: உள்ளம் கலங்கினார் அல்லர் என்பதைப் பொன்முடியார், ஓக்கூர் மாசாத்தியார், காக்கை பாடினியார், பூங்கணுத்திரையார் போன்ற புலவர்கள் பாடிய புறப்பாடல்களால் அறியலாம்.
அகத்தியலில் ஆண் பரத்தை:-

தமிழின் நாகரீகம்:

மொழி, இனம், நாடு கடந்து உலகத்திலேயே பழந்தொழில்கள் இரண்டு, ஒன்று பசி மற்றது கிசி, ஆம் வேளாண்மையும் பரத்தையும். சர்வதேசத் தொழில்களில் ஆணாதிக்கம் பெண்களுக்குச் செய்த கொடுமையில் இதுவே முதன்மையாகும்.

ஆனால் நாகரீகம் மிக்கவர்களாயிற்றே தமிழர்கள், ஆதலினால் சங்க காலத்தில் தேவதாசி என்றோ பெண்பிள்ளைகளைத் தே@@@ள் என்றோ எங்கும் அழைக்கவில்லை.
கடவுளின் பெயரால் மனிதத்தை கேவலப் படுத்துதல் என்பது சங்கத்தமிழில் எங்குமே கிடையாது என்றே சொல்லலாம்.

சங்கத் தமிழ் இதை வெறும் மனப்போக்காய் மட்டுமே பார்த்து தீர்வை அவரவர் நினைப்பிற்கே விட்டது என்று சொன்னால் மிகையாகாது.

பரத்தை என்பதை வள்ளுவர் கூட பெண்களுக்கு மட்டுமே உரித்தானதாகச் சொல்லவில்லை..

பெண்ணியியலார் எல்லாரும் கண்ணின் - பொதூண்பர்
நண்ணேன் பரத்தனின் மார்பு.
இளங்கோவையும் பாருங்கள்:
வறுமொழி யாளாரோடு வம்பப் பரத்தனோடு
குறுமொழிக் கோட்டி நெடுநகைப் புக்குப
இப்போது இவைகளுக்கு முன்னோடியாக இருந்த  சங்கத்தமிழில் காண்போம் வாருங்கள்
பாடல்: அகநானூறு (146)
கவிஞர்: உவர்க் கண்ணூர்ப் புல்லங்கீரனார்
திணை: மருதம்
துறை: வாயில் மறுத்தல்

வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி,
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ,
படப்பை நண்ணி, பழனத்து அல்கும்
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர்,
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள்
இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை
யார்கொல் அளியள்தானே எம் போல்
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி,
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின்
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து,
ஆயமும் அயலும் மருள,
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே?

உரசி வயிலில் ஒதுங்கியது போல எங்கள் ஊரானின் தேர் மகளிர் சேரியில் வலிமைமிக்க ஆண்மாடு எருமைக்கிடா பொய்கையில் நன்கு ஊறி தோட்டத்தில் ஒதுங்கியுள்ளதாமே..!!
இயக்கமில்லாமல் நிற்கும் தேரைப் பார்த்து எனக்கும் தான் ஆசை நானும் மெல்லியலாள் தானே..!!
காற்றில் ஆடி நனைந்த மலர் போல் இருக்கும் நானும் போகலாம் தான் அந்தப் பரத்தனை நம்பி...!!
என் சூடானகண்ணீர் குளிர் மார்பில் பட்டு உறைந்து போயின.. ஊர்பேச்சு கேக்கனுமே அந்த பரத்தனை நம்பிப் போனால் அதான் போகலை..ன்னு முடிக்கிறாள்.
புறத்தியலில் பெண்:-

முந்தைனநாள் தந்தையையும் கணவனையும் போருக்கனுப்பிய தமிழ் பெண் ஒருத்தி இன்று மகனையும் அனுப்பிவிட்டு அவன் மகன் போர்க்களத்தில் புறமுதுகிட்டான் என அறிந்து தன் பாலூட்டிய மார்பை அறுப்பேன் எனச் சூளுரைத்து, கையில் வாளெடுத்தாள்.

போர்க்களம் சென்றாள், வடுபட்டு வீழ்ந்து கிடந்த பிணங்களில் தேடினாள், தன் மகன் நெஞ்சில் அம்புகண்டு விழுப்புண்னால் மாண்டான் என்று உவகை கொண்டாள்.
ஈன்ற பொழுதினும் பெரிதுவந்தாள் என காக்கைப்பாடினியாரின் பாடலே மனது முழுவதும் அசை போடுகிறது.
தாய்வழிச் சமூக மரபில் பெண்களுக்கிருந்த உரிமை ' உடன்போக்கு மணம் ' என்னும் பழக்கத்தில் தொடர்ந்திருக்கிறது. ஏற்பாட்டு திருமணத்திற்கும் எதிரான பெண்களின் காதல் மண உரிமையாக இது விளங்கியது. 
ஆண்களுக்கு இணையான இலக்கியப் புலமை பெண்களுக்கு இருந்தும் அந்தப் புலமைக்கு சமூக மதிப்பு இருந்தது என்பதும் தமிழ்ப் பெண்களின் வரலாற்றில் உள்ள செய்தியாகும்.
 

உப்பு , மீன், மோர் , பூ விற்றல் போன்ற சிறு தொழில், கலைத்திறன் காட்டுபவர்களாகவும்
[ விறலியர்] பெண்கள் சமூகத்தில் இருந்துள்ளனர்.
 

நீராடல், வண்டல் அயர்தல், ஊசல், பந்தாடல், ஓரையாடல் போன்ற பல்வேறு
 
விளையாட்டுகளிலும் பெண்கள் ஈடுபட்டிருந்தனர் என்னும் பொழுது , பெண்கள் மகிழ்வு, சமூகம் ஒத்துக்கொண்ட கருத்து என புலப்படுகிறது. பெண்கள் வீட்டின் புறத்தே சென்று விளையாடும் உரிமை பெற்றிருந்தனர். போர்க்கள வீரம் போற்றும் மனத்திண்மையுடைய மகளிரை புறநானூற்றில் காணலாம்.
 

இவையெல்லாம் பெண்களுக்கு சமூக மதிப்புகள். மற்றபடி சங்க காலப் பெண்கள், அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு இவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக தள்ளப்பட்டார்கள்.
முடிவுரை:-
ஆண்களுக்கும் பெண்களும் இவ்வளவு உரிமையோடு பற்பல பாடல்களைப் பாடி இருந்தாலும் ஒரு சில விசயங்களை மறுக்காமல் ஒத்துக்கொள்ள வேண்டியுள்ளது அவையாவன, இடைக் காலத்தை நோக்க , சங்க காலப் பெண்கள் உரிமை பெற்றிருந்தனர். இக்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் பல்வேறு வாய்ப்புக்கள், வசதிகள், உரிமைகள் பழங்காலத்தில் இல்லை என்றாலும் சங்க காலச் சமூகம் , தாய்வழிச் சமூக மரபு மிகத் தொன்மையாகப் போய்விட்ட ஆணாதிக்க சமூகமாக விளங்கினாலும் , குடும்பம் என்ற பாங்கில் பெண் அடிமை போல நடத்தப்பட்டார் என்றோ, அடக்கு முறைக்கு ஆளானாள் என்று இல்லை. 
நல்லதோர் போட்டி வைத்து தமிழை மேலும் ருசிக்கச் செய்த தமிழ்க் குடிலுக்கு நனி நன்றி...


தமிழ் இனி மெல்ல வாழும்..!!!

2 comments:

  1. Replies
    1. தோழமைக்கு நன்றியும், வாழ்த்துகளும் .

      Delete

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_