December 11, 2014

கட்டுரைப்போட்டி- இரண்டாவது பரிசு கட்டுரை

என் வாழ்வில் பெண் என்பவள் - ஜாரா..

முன்னுரை:

இறைவன் கல்லையும் மண்ணையும், செடி கொடிகளையும், பறவை விலங்குகளையும் படைத்தபின் இறுதியாக படைத்த அழகிய உயிரினம் மனிதன். ஆறாம் அறிவை கொண்டு தன் படைப்பினை மேலும் அழகாக்கி வைத்தான் செடி கொடிகளோடு வாழ்த் துவங்கிய ஆதி காலம் தொட்டே பெண்கள் அடிமைகளாக வாழ்ந்திருப்பதை பல வரலாற்று நிகழ்வுகளில் காண்கின்றோம் இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பெண்ணடிமை சிறுக சிறுக மங்கி வருவதையும் நாமே சான்றாக வீற்றிருந்தும் காண்கின்றோம்
உண்மையில் பெண்களாகிய நமக்கு என்னதான் தேவை?? எதனின் அடிப்படையில் நம் தேவைகளும், பெண்ணியமும் நிர்ணயிக்கப் படுகிறது..??
பொருளுரை:
சிறைகாக்கும் காப்பவென் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை.
என்ற திருக்குறளில் மிகத் தெளிவாக அழகாக திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் அதாவது சிறை வைத்துக் காப்பதால் என்ன பயன்? பெண்கள் தங்கள் நிறைமாண்பு காத்தலே தலைமையானது. என்ற பொருள் விளங்க ஒரு பெண்ணை பத்திரமாக பூட்டி வைத்து பாதுகாப்பதால் பெண்மை ஓங்கிவிட முடியாது அவர்களுக்கு கல்வியும் அறிவும் தைரியத்தையும் கொடுத்து தங்கள் கால்களில் தாங்கள் நிற்கின்றோம் என்ற மன வலிமையை அவர்கள் உணர்ந்து அதன் பெருமையை உலகெங்கும் உணர்த்த வேண்டும்
பெண்ணின்றி இவ்வுலகில் ஒரு அணுவும் அசையாது பெண்ணே பூரணமானவள் ஒரு மானிடப் பிறப்பை அழகாய் கருப்பையில் சுமந்து ஈன்றெடுக்கும் பொறுமையானவள் அவள் பொறுமையில் பூமியைப் போல பூமி எப்படி தன் மீது சமூகம் போடும் அத்தனை ஆட்டங்களையும் சகித்துக் கொண்டு தன்னகத்தே புதைத்துக் கொள்கிறதோ அதிப்போலவே பெண்ணும் தனை சார்ந்த குடும்பமும் சுற்றமும் மேற்கொள்ளும் எல்லா செயல்களையும் பொறுத்துக் கொள்கிறாள் சில சமயங்களில் பூமியைப் போலவே பொங்கி தன் கோபத்தின் நீட்சியை தீர்த்துக் கொள்கிறாள் ஆனால் அப்பொழுது அவள் தன் சுற்றத்தை விட்டுக் கொடுப்பதில்லை
பாரதியின் பார்வையில் :
பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி

பிறப்பித்தேன்;அதற்குரிய வெற்றி கேளீர்;
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்
மனையாளும் தெய்வமன்றோ? மதிகெட் டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்
விடுதலையென் பீர்,கருணை வெள்ள மென்பீர்,
பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை.

இது முண்டாசுக் கவி பாரதியின் வரிகள் பெண்களை பற்றி நிறைய எழுதிய பாரதியின் வரிகளில் எனக்கு மிகவும் பிடித்தவை இவை இவ்வரிகளில் பாரதி அழகாக விண்ணையும் விடுதலையையும் பற்றி பேசுகிறீர்களே முதலில் பெண் விடுதலைக்கு வாரும் என்று கடிந்து கூறி இருப்பார் ஒரு பெண்ணின் விடுதலையிலும் பங்கீட்டிலுமே நாட்டின் விடுதலையை காண முடியும் என்பதை ஆணித்தரமாக அடித்துச் சொன்ன வரிகள் இவை மேலும் உலகில் யாவும் தெய்வமென்றால் மனைவியும் தெய்வம் தானே முட்டாள்களே என்று கோபத்தை உணர்த்தியிருக்கும் உணர்ச்சிமிகு வரிகள் பாரதியை தவிர்த்து இந்தியப் பெண் விடுதலை என்பது சாத்தியமற்ற ஒன்றாகும்
சங்க கால பெண்கள் :
சங்க காலத்தில் வாழ்ந்த 1446 புலவர்களில் பெண்பாற் புலவர்கள் 32 பேர் இருந்திருக்கின்றனர். இந்தப் பெண்பாற் புலவர்கள் பெயர்களும், அவர்கள் பாடிய பாடல்கள் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பொருநல், ஆற்றுப்படை, நற்றினை என்கிற பிரிவில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன சங்க கால பெண்களின் வாழ்க்கையை எடுத்து பார்ப்போமேயானால் நமக்கு சங்க இலக்கியங்களில் ஏராளமான தகவல்கள் தந்து உள்ளது. அவ்வையார், நச்செள்ளையார், காக்கைபாடினியார் போன்ற பெண் புலவர்கள் இக்காலத்தில் வாழ்ந்து தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். மகளிரின் வீரம் குறித்து பல்வேறு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கற்பு பெண்களின் தலையாய நம்பிக்கையாக போற்றப்பட்டது. காதல் திருமணம் சாதாரணமாக வழக்கத்திலிருந்தது. பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தெரிவு செய்யும் உரிமையைப் பெற்றிருந்தனர். இருப்பினும், கைம்பெண்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. சமுதாயத்தின் மேல்மட்டத்தில்சதிஎன்ற உடன்கட்டையேறும் வழக்கம் பின்பற்றப்பட்டது. அரசர்களும், உயர்குடியினரும் நாட்டிய மகளிரை ஆதரித்துப் போற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது
இன்றைய பெண்களின் தவறான சுதந்திரம் :
இத்தகைய பாரம்பறிய பெண்கள் இன்று எத்தகைய வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது ஆன்றோர்களும் சான்றோர்களும் கொண்டாடிய பெண் சமூகம் தற்போது மிகவும் மோசமான ஒரு சூல்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது பெண் எனும் ஒற்றை ஆயுதத்தை ஏந்தி அவர்கள் போர் புரிவது தங்கள் பெண்மையுடனே என்பது புரியாமல் ஒரு யுத்தத்தை மேற்கொண்டிருக்கின்றனர் கட்டற்ற சுதந்திரமும் செல்வச்செழிப்பும் கல்வியும் பெண்களின் ஏக போக மெத்தனத்திற்கு வழியாகிக் கொண்டிருக்கிறது மரியாதைக்கும் பயத்திற்க்கும் வேற்பாடு தெரியாமல் குரங்கின் கையில் ஏந்திய கோலாய் பெண் சுதந்திரம் தடம்மாறி அலைந்துக் கொண்டிருக்கிறது தற்போது பெருகி வரும் தகவல் தொடர்பு கருவிகளும் அறிவியல் முன்னேற்ற சாதனங்களும் உலகின் எல்லையை சுருக்கிற்று என்றே சொல்லலாம் உலகின் எந்த மூலையில் உள்ள நாகரீகமும் நொடிப்பொழுதில் கண்ணினித் திரை வழியே விழித்திரைக்குள் நுழைந்து நம் பெண்களின் பாரம்பரியத் திரையை கிழித்து தொங்கவிட்டு விடுகின்றது
புகை பிடித்தலும், மதுபானங்களை அருந்துவதிலும் கற்பு நெறியிலும் பெண்கள் தங்களை ஆணுக்கு நிகராக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு சரிவுப் பாதையில் வேகமாக செல்கின்றனர் இதனால் பெண்மைக்கும், பெண்ணியத்திற்க்கும், வீட்டிற்க்கும், நாட்டிற்க்கும் ஏற்படும் இன்னல்களை அவர்கள் உணர்தல் வேண்டும்
ஆங்காங்கே நடக்கும் பாலியல் கொடுமைகள் பெண்களின் பாதுகாப்பு உணர்வை சீர்குலைக்கச் செய்கின்றது சிறிய வயதிலேயே பெண்களுக்கு தொடுதல் குறித்த சீரியத் தெளிவு வேண்டும் நட்பாக பழகும் ஆண் நண்பர்களின் எதை பகிர வேண்டும் எதை பகிரக் கூடாது என்பது குறித்த தெளிவை பெற்றோர்கள் முறையாக வழங்குதல் வேண்டும் தினமும் பிள்ளைகளோடு உட்கார்ந்து மனம் விட்டு பேசும் பெற்றோர்கள் எத்தனை பேர் உள்ளனர்? பணமும் சமுதாயத்தில் பகட்டுக்கும் பழக்கமாகி விட்டனர் ஒரே வீட்டிற்க்குள் இருக்கும் சொந்தங்களுக்குள் கூட ஏக இடைவெளிகள் இவையெல்லாம் களைதல் வேண்டும் கல்வியும் உத்தியோகமும் அறிவுக் கண்களை திறக்க வேண்டுமே தவிர அகங்காரத்தை திறந்து விடக் கூடாது
பட்டொளி வீசும் பெண்கள் :
பெண்களின் பால் ஆயிரம் குறைகளைக் கூறினாலும் அவர்கள் பல லட்சங்களான சாதனைகளை புரிந்து வந்துள்ளது இன்றியமையாதது எங்கள் பெண்கள் சாதாரணமானவர்கள் அல்ல ஏர் பிடித்த கைகள் இன்று ஏவுகணைகளை ஆழ்கின்றது, கரண்டி பிடித்த கைகள் இன்று கணினித் துறையில் சாதிக்கின்றது ஆண்களிடம் பேசுவதற்கே அஞ்சியவர்களும் இன்று ஆண்களிடம் பாலினம் கடந்த நட்பு பாராட்டும் அளவிற்கு அவர்களின் இன்றைய நிலை உயர்ந்துள்ளது இரவு நேரத்தில் வெளியில் செல்ல தயங்கியவர்களும் இன்று பணி காரணமாக அதிகாலை வீடு திரும்புகின்றனர். இன்று தனக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் பக்குவமும் உரிமையும் பெற்றுள்ளனர் நாடாளும் பதவி விண்வெளியில் பயணம் என வளர்ந்து ஆணுக்கு சமமாக அனைத்து துறைகளிலும் ஒளிவீசி வருகிறாள் பெண். ஆண்களுக்கே உரிய விளையாட்டிலும் கூட இன்று அசாத்திய சாதனைகளை படைக்கிறாள். இன்று பொருளாதரத்திலும் வலுப்பெற்றுள்ள பெண்கள் தங்கள் தேவைகளை தாங்களே தீர்வு செய்யும் அளவிற்கு முன்னேற்றம்ம் அடைந்தது சாலச்சிறந்ததாகும் திருமண வாழ்வு சரியில்லாமல் போனால் அதை நேர் செய்து தன் வாழ்வை மேன் படுத்திக் கொள்ள சுதந்திரம் கொண்டவளாக மின்னுகிறாள் பெண்.  
இன்றைய சில சாதனை பெண்கள்
சகுந்தலா தேவி என்கிற இந்தியப் பெண்மணி 1980ம் ஆண்டில் லண்டனில் நடத்தப்பட்ட கணித சோதனையில் எண்களின் பெருக்குத் தொகையை மனதிற்குள்ளாகவே கணக்கிட்டு விரைவாக பதில் கூறி சாதித்தவர் .இதனால் ஹியூமன் கம்ப்யூட்டர் (மனித கணினி) என்ற சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்காவில் உள்ள `நாசா' விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணிபுரிந்து வரும் இவர், 

சமீபத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தார். அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சுனிதா, 188 நாட்கள் 
தங்கியிருந்து புதிய உலக சாதனை படைத்தார். விண்வெளியில் மராத்தான் ஓட்டம், விண்வெளியில் அதிக முறை நடந்த வீராங்கனை என்று வேறு பல சாதனைகளையும் அங்கு நிகழ்த்தினார். இந்திய அரசு, சுனிதாவின் சாதனையை அங்கீகரித்து இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண விருதுக்கு தேர்வு செய்துள்ளது. 

முதல்முறையாக மகளிருக்கான கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை .சி.சி. அறிமுகம் செய்துள்ளது. இதில் பந்து வீச்சாளர் பட்டியலில் இந்தியக் கேப்டன் ஜுலான் கோஸ்வாமி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
சானியா மிர்சா இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை. இப்பொழுது ஹைதராபாத்தில் வசிக்கிறார். டென்னிஸ் தர வரிசையில் இடம் பிடித்த இந்தியப் பெண்களில் மிக உயர்ந்த தரவரிசையை அடைந்தவர் சானியா மிர்சா. இந்திய அரசாங்கம் அவருக்குப் பத்மசிறீ விருது வழங்கிக் கௌரவித்துள்ளது
தென்னிந்தியத் திரைப்படத் துறையில் எத்தனையோ சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ஆனால் உலகிலேயே அதிகப் படங்களில் நடித்து சாதனைப் படைத்தவர் தமிழ் நடிகை மனோரமா. நகைச்சுவைக் கதாபாத்திரங்களின் நடிக்கும் இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவரென்பது குறிப்பிடத்தக்கது
மேன்க்டே சன்ங்நேஜாங்க என்னும் இயற்பெயர் கொண்ட மேரி கோம் தான் இந்திய குத்துச் சண்டை வீராங்கனைகளில் மிகவும் சிறந்தவர். இவர் ஐந்து முறை உலக குத்துச் சண்டை போட்டியில் வெற்றிப் பெற்று சாம்பியன் ஆனவர். லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றவர். மணிப்பூரில் பிறந்த இவர் தான் இந்தியாவின் முதல் பெண் குத்துச் சண்டை வீரர். மேலும் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் முதல் பதக்கத்தை வாங்கிய பெருமையும் இவருக்கே உரியது.
சுதா மூர்த்தி முதல் பெண் இன்ஜினியர். இவரை இன்ஜினியராக தேர்ந்தெடுத்தது TELCO என்னும் கம்பெனி. தற்போது இவர் தான் இன்போசிஸ் என்னும் கம்பெனியின் சொந்தக்காரரான நாராயண் மூர்த்தியின் மனைவியும் இவர் தான். அவர் மிகவும் சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக சேவை செய்வதில் மிகவும் பிரபலமானவர்களுள் ஒருவர். மேலும் இவர் பத்மஸ்ரீ மற்றும் ராஜலட்சுமி என்னும் பட்டத்தை, இவரது சிறந்த சமூக சேவை மனப்பான்மையால் பெற்றார்.
இன்னும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம் நம் பெண்களின் சாதனைகளை, இத்தகைய பெண்களை முன் மாதிரியாக கொண்டு பள்ளிப் பருவத்திலிருந்தே பெணகள் தங்களை சரியான பாதையில் கொண்டு செல்லுதல் வேண்டும் மனதில் தெளிவும் செயலில் தைரியமும் கொண்டு பெண்ணியத்தை பாதுகாப்பட்து வரும் பெண் தலைமுறைகளின் தலையாய கடமையாகும்
என் பார்வையில் :
நான் ஒரு கிராமத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்த பெண் இரு வேறு சூழலிலும் பெண்களின் வாழ்க்கையை ஓரளவு கண்டுனர்ந்திருக்கிறேன் நிறைய வேறுபாடுகளை கொண்ட சூழல் அது பொதுவாக கிராமத்தில் பெண்கள் பட்டங்களை எளிதில் முடித்து விடுகின்றனர் ஆனால் அதை அவர்கள் சரியான இடத்தில் பதிவு செய்யாமல் கல்யாணம் சூழல் என்ற இடங்களில் பொருத்திக் கொள்கின்றனர் உதாரணத்திற்க்கு கட்டடக்கலையில் பட்டம் பெற்ற ஒரு பெண் அந்த கிராமத்தில் உள்ள வங்கி ஒன்றில் கணக்காளராக பணி புரிகிறார், சட்டம் பயின்ற ஒருவர் தன் குடும்ப வழக்கு ஒன்றுக்காக மட்டும் பணி புரிகிறார் பெரும்பாலான கலைக் கல்லூரி மாணவிகள் சென்னையில் துணிக்கடையிலும் எலக்ட்ரிக், பாத்திர, மளிகை கடைகளிலும் பணி புரிகிறார்கள் இதனால் அங்கு படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை என்பதும் வேலை இருந்தும் செய்ய இயலாத குடும்ப அமைப்பு என்பதும் தெளிவாக விளங்குகிறது ஆனால் சென்னைச் சூழலில் கலைப் பிரிவில் பட்டம் பெற்ற பெண் பெரிய தகவல் தொடர்பு நிறுவனத்துல் ஒரு கணினித் துறை பட்டதார்க்கு ஈடாக வேலை பார்க்கின்றார் வருமானமும் பெருகின்றார் அழகியல் பட்டம் முடித்த பெண் வீடு, வாகனம் என்று அதிகளவில் வருமானம் வரும் தொழிலை நடத்துகின்றார் இதனால் பெண்களின் முன்னேற்றம் என்பது கல்வி ஒன்றை மட்டும் சாராமல் அவர்கள் வாழும் இடத்தையும் சார்ந்தே அமைகின்றது என்பது புலனாகின்றது
இந்நிலை மாற வேண்டும் கிராமங்களுக்கும் தொழில் நுட்பங்கள் போய்ச் சேர வேண்டும் பெண்களின் முன்னேற்றம் என்பது அதனையும் சார்ந்தே அமைகின்றது
பெண்களின் மனவியலையும், உளவியலையும் பாதிக்கும் தொலைகாட்சித் தொடர்களிலிருந்து பெண்கள் விலகுதல் வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சமாக நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் பெண்கள் இம்மாதிரியான தொடர்களில் தங்கள் திறமைகளையும் மனதில் தோன்றும் சாதனை வேர்களையும் அமிலம் ஊற்றி அழித்து வருகின்றனர் இன்னிலை மாற வேண்டும்
பால்ய திருமணங்கள் இப்போது அடியொடு நிறுத்திவிடப்பட்டது என்றாலும் பள்ளிப் பருவத்தில் காதல் செய்யும் விதமாக பால்ய திருமணங்கள் மாற்று வடிவத்தில் நிகழ்ந்துக் கொண்டுதானிருக்கிறது எட்டாம்,பத்தாம் வகுப்பு படிக்கும் போதே காதலிப்பதும் வீட்டை விட்டு ஓடிப்போவதும் கர்ப்பம் தரிப்பதும் பெண்களின் சாபக்கேடாக மாறிக் கொண்டிருக்கிறது பெண் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் மனம் விட்டு பேசுதல் வேண்டும் சமுதாயத்தில் தமை சுற்றி நடக்கும் இம்மாதிரியான பகல் வேட காதல்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்த வேண்டும் அன்பையும் பாசத்தையும் நம்பிக்கையயும் அவர்கள் மேல் விதைக்க வேண்டும்
முடிவுரை :

பெண்களை பூவுக்கும், மானுக்கும், நிலவுக்கும் ஒப்பிட்டு பேசிய கவிஞர்கள் அவர்களுடைய அழகால், உடல் வடிவமைப்பால் கொண்ட பலகீனத்தை பற்றியே அதிகம் எழுதி தீர்த்துள்ளனர். எதார்த்தத்தில் அப்படி அல்ல. ஒவ்வொரு ஆணுக்குப் பின் நின்று ஆதிக்கம் செய்ய வைத்தது பெண்களேபெண்கள் பலத்தால் புலியைப் போன்றவர்கள், சிங்கத்தை போன்றவர்கள், புலியிலும் சிங்கத்திலும் பெண்பால் உண்டல்லவா அதைப்போலவே. பொறுமையில் அந்த பூமியை போன்றவர்கள், அன்போடு அரவணைக்கையில் அந்த தென்றலைப் போன்றவர்கள், அம்மா என்று ஓடி வருபவரின் பசி தீர்க்கும் போது அட்சயப் பாத்திரத்தை போன்றவர்கள், உதவி என்று வருபவருக்கெல்லாம் கொடுத்து கொடுத்து கைகள் சிவந்தவர்கள் திறமைகளை நிலை நிறுத்துவதில் தேனீக்களை போன்றவர்கள் பெண் ஒரு ஆழுமை, பெண் ஒரு படைப்பினம், பெண் ஒரு தோழமை, பெண்ணாக பிறந்திட என்ன மாதவம் செய்தேனம்மா என்ற கூற்றை மெய்ப்பிக்கும் பெண் ஒரு உன்னதமேபெண்மையை போற்றுவோம்

No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_