December 11, 2014

கட்டுரைப்போட்டி- முதல் பரிசு கட்டுரை

வெளிநாட்டு வாழ்க்கை - -”பரிவை.சே.குமார்
வெளிநாட்டு வாழ்க்கை என்பது இன்று பெரும்பாலானோருக்கு வாய்த்திருக்கும் வாழ்க்கை. குடும்பம், குழந்தைகள் என எல்லாம் விட்டு ஒரு அறைக்குள் நான்கைந்து ஆண்களாய் தங்கும் இந்த வாழ்க்கை ஊரிலிருந்து பார்ப்பவர்களுக்கு பகட்டாய்த்தான் தெரியும். எல்லோருமே கொட்டிக் கிடப்பதை அள்ளி வருவதாய் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பானதா அல்லது சீரழிக்கிறதா என்பதை கொஞ்சம் பார்க்கலாம்.
குறிப்பாக தென் தமிழகத்து ஊர்களில் இருந்து பெரும்பாலானோர் சிங்கப்பூர், மலேசியா என சம்பாதிக்கப் போவார்கள். அவர்கள் எல்லாம் வெளிநாடு செல்ல ஏஜெண்டிடம் லட்சங்களைக் கட்டி காத்திருப்பார்கள். ஒரு நாள் ஏஜெண்டிடம் இருந்து அழைப்பு வர கிளம்பிச் செல்வார்கள். இரண்டு வருடங்கள் ஊருக்கே வர முடியாத வாழ்க்கை வாழ்வார்கள். மாத மாதம் அவர்கள் அனுப்பும் ஆயிரங்கள் வீட்டில் இருப்பவர்கள் மனதில் சந்தோஷத்தைக் கொடுத்தது என்றாலும் அவர்கள் சந்தோஷமாக இருந்தார்களா என்பதை யாரும் தெரிந்து கொள்ளவில்லை. அவர்கள் கொடுத்து விடும் சோப்பும் டிரஸ்சும் கொடுத்த சந்தோஷம் எல்லாம் அவர்களின் வலி நிறைந்த வாழ்க்கையைச் சொல்லத் தவறியதை இப்போது உணர முடிகிறது.
இப்போது போல் அப்போது தினமும் பேசுவதற்கு இணைய வசதியோ, செல்போன் வசதியோ இல்லை. ஏன் பெரும்பாலான கிராமங்களில் தொலைபேசி வசதி கூட இருக்கவில்லை. அருகில் இருக்கும் டவுனிலோ அல்லது உறவினர் வீட்டிலோ இருக்கும் தொலைபேசிக்கோ வாரம் ஒருமுறை பேசுவதென்பதே அரிது. பெரும்பாலும் சுமைகளையும் துக்கங்களையும் தூக்கிச் சுமக்கும் புறாவாய் கடிதம் மட்டுமே இங்கும் அங்கும் அடிக்கடி பறந்து கொண்டிருந்தது. அதிலும் ஊரிலிருந்து செல்லும் கடிதம் பணத்தேவையைச் சுமந்தும் அங்கிருந்து வரும் கடிதம் பாசத்தையும் அன்பையும் அள்ளி எடுத்து அதனுடன் போட்டோவையும் சுமந்து வரும். இதுதான் அன்றைய வாழ்க்கையாக இருந்தது.
இப்போது நிலமை மாறிவிட்டது... வெளிநாடு என்பது என்னவோ வெளியூரில் வேலை பார்ப்பது போலத்தான். படித்தவர்களின் நிலை படிக்காதவர்களுக்கு இல்லை என்றாலும் நல்ல வேலையில் இருந்தால் நினைத்த போது ஊருக்குப் போகலாம்... ஊருக்குப் பேசலாம்... நல்ல சம்பளமாக இருந்தால் குடும்பத்தையும் கொண்டு வந்து வைத்துக் கொள்ளலாம். தென் தமிழகத்தில் இருந்த வெளிநாட்டு மோகம் இப்போது தமிழகம் எங்கும் பரவிவிட்டது. பரவாயில்லையே வெளிநாட்டு வாழ்க்கை முன்பு போல் கஷ்டமாக இருப்பதில்லையே என்று நினைப்போமேயானால் அது மிகத் தவறு என்பதை இங்கு ஆணித்தரமாக சுட்டிக் காட்டலாம்.
சில நாட்களுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சியில் வந்த செய்தியினை முகநூலில் பார்க்க நேர்ந்தது. ஏஜெண்ட் சொல்லிக் கூட்டியாந்தது ஒண்ணு...  கிடைக்கிற சம்பளம் ஒண்ணு... என்ற வேதனையை பலர் பகிர்ந்தார்கள். அவர்கள் எல்லாம் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இணைய வசதி இருப்பதால் வெளிநாட்டு வாழ்க்கை என்பதை கவிதையாகவும் கதையாகவும் காணொளியாகவும் காட்சிப்படுத்துகிறார்கள். வேதனைப்படுகிறோம்... செத்து மடிகிறோம் அப்படின்னு வசனங்களை அள்ளி வீசுகிறார்கள். ஆனால் இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டுதானே வந்தோம். அவர்களா நம்மை கட்டி இழுத்து வந்தார்கள்... இல்லையே... கடனும் கற்பனைகளும்தானே நம்மை இழுத்து வந்தன என்ற உண்மையை யாருமே கவிதையாகவோ கதையாகவோ காணொளியாகவோ வடிப்பதில்லையே ஏன்.?
பகட்டாகவும் பக்கத்து வீட்டுக்காரனுக்கு பணம் காய்க்கும் மரமாகவும் தெரியும் வெளிநாட்டு வாழ்க்கை
பகட்டையும் பணத்தையும் தருகிறதா என்றால்... ஒரு சிலருக்கே அதைத் தருகிறது எனலாம். பெரும்பாலானவர்களின் பேச்சிலர் வாழ்க்கை என்பது பத்துக்குப் பத்து அறைக்குள்தான் கழிகிறது என்பதுதான் உண்மை. ஒரு பத்துக்குப் பத்து அறைக்குள் அடுக்குக் கட்டில்கள் போட்டு நாலைந்து பேராக வாழ்வதும்... அந்த ஒற்றைக் கட்டில்தான் தான் வாழும் இடம் என்பதும் அனுபவிப்பவனுக்கு மட்டுமே தெரியும்.

குறிப்பாக கிளினீங் வேலைக்கும் கட்டிட வேலைக்கும் வருபவர்களை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கும். காரணம் ஊர்க்காசுக்கு பத்தாயிரம் கூட கிடைக்காத ஒரு வேலைதான் கிளினீங் கம்பெனி வேலை... கேம்ப்பில் மொத்தமாக தங்கி... அதிகாலையில் எழுந்து வரிசையில் நின்று கழிவறை, குளியல் வேலைகள் முடித்து பிளாஸ்டிக் கவர்களில் கட்டிய சாப்பாடுகளை எடுத்துக் கொண்டு தயாராக நிற்கும் வாகனத்தில் ஏறி வேலை செய்யுமிடம் செல்ல வேண்டும். இரவு திரும்பி துணி துவைத்து குளித்து (இப்பவும் அதே வரிசைதான்) அப்பாடா என்று படுக்கும் போது பதினோரு மணியோ பனிரெண்டு மணியோ ஆகும்... மறுநாள் காலையும் இதே நிலை... கையில் வாங்கும் காசோ கொஞ்சம்... அதில் ஊருக்கு அனுப்பி... போன் மற்றும் மற்றவற்றிற்கும் பயன்படுத்தி வாழும் வாழ்க்கையில் சந்தோஷம் ஏது..?
இதேநிலைதான் கடைகளில் வேலைக்கு வருபவர்களுக்கும்... ஒரு வாரம் முன்பு ஆந்திர நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டது. அவர் சென்ற சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பையன் அவர் தெலுங்கில் பேசுவதைப் பார்த்து 'அண்ணா நீங்க தெலுங்கா... எனக்கொரு உதவி செய்யுங்க... என்னை எப்படியாச்சும் ஊருக்கு அனுப்பி வையுங்க... 1200 திர்காம் சம்பளமுன்னு சொல்லிக் கூட்டியாந்து 500 திர்காம்தான் தர்றாங்க... கடனை வாங்கித்தான் வந்தேன்... காலையில 8 மணியிலிருந்து இரவு 11 மணி வரை வேலை... அதுவும் நின்னுக்கிட்டே இருக்கணும்... எப்படியாச்சும் என்னை ஊருக்கு அனுப்பி வைங்கண்ணேன்னு சொன்னானாம். இதுதான் ஆசைப்பட்டு வந்து அவதிப்படுவோரின் நிலை.
ஊரில் இருந்து நல்ல செய்தியோ கெட்ட செய்தியோ எது வந்தாலும் அந்தச் சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள நல்லதொரு நட்பு நாமிருக்கும் அறையில் கிடைத்தால் அது நாம் செய்த பிறவிப்பயனே. இல்லையே மடிசாய அன்னையோ... தோள் கொடுக்க நண்பனோ... ஆறுதலாய் அணைத்துக் கொள்ள மனைவியோ இல்லாமல் சுமையை இறக்குமிடமாக கழிவறை மட்டுமே காத்திருக்கும்.
எத்தனை கஷ்டங்கள்.... எத்தனை கவலைகள்... எத்தனை பிரச்சினைகள்... எத்தனை வருத்தங்கள்... என எத்தனை எத்தனையோ இருந்தாலும் ஊரில் இருந்து வரும் அழைப்புக்கு குரல் கொடுக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் மட்டுமே வெளிநாட்டு வாழ்க்கையில் வெகுமதி. இதெல்லாம் தெரியாமல் பணம்... பணம்... என்று பணங்காச்சி மரமாக நினைக்கும் உறவுகளுக்கு தெரிவதில்லை இங்கிருக்கும் உடல்கள் உயிரை அங்கு வைத்து விட்டு வந்திருப்பது. சரியான சாப்பாடு... நல்ல துணி என்பதெல்லாம் மறந்து வாழும் வாழ்க்கைத்தான் வெளிநாட்டு வாழ்க்கை... ஊர் நினைப்போடும் உறவுகள் நினைப்போடும் வாழும் வாழ்க்கைதான் வெளிநாட்டு வாழ்க்கை... தலையணைகள் நனையும் இரவுகளில் கழியும் வாழ்க்கைதான் வெளிநாட்டு வாழ்க்கை...
வெளியில் இருந்து பார்க்க அழகான கண்ணாடி மாளிகையாகத்தான் தெரியும்... உள்ளே நுழைந்து பார்த்தால்தான் உடைந்த சில்லுகள் ஆயிரங்கதைகள் சொல்லும்.


2 comments:

  1. பரிசுக்குறிய கட்டுரையாக எனது கட்டுரையை தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கும்... மிகச் சிறப்பான போட்டியாக நடத்திய குடில் நிர்வாகிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்னை எழுதச் சொல்லி ஊக்கப்படுத்திய காயத்ரி அக்காவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.. தொடரட்டும் எழுத்து பணிகள்... வாழ்த்திற்கு மகிழ்ச்சியும், நன்றியும்.

      Delete

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_